search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளத்தில் கரையோர கிராமங்கள்"

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களை சேர்ந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #Hogenakkal #Cauvery
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

    இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

    2 அணைகளில் இருந்தும் இன்று காலை 2 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் மழை நீரும் சேர்ந்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 2 லட்சத்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்-வேன், பஸ்களில் ஒகேனக்கல் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த சும்புருட்டு, புளியமரத்து கொம்பு ஆகிய கிராமங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் தங்கள் படகுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து உள்ளதால் ஒகேனக்கல், சத்திரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்து பொதுமக்களை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    ஒகேனக்கல்லில் இருந்து கரைபுரண்டு ஒடும் வெள்ள நீர் ஊட்டமலை வழியாக பென்னாகரம், நாகமரை, செல்லமுடி, ஏர்கோல்பட்டி, சித்திரப்பட்டி, பூச்சியூர், குருகலையனூர் ஆகிய ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு செல்கிறது.

    அந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மற்றும் ஒலி பெருக்கி மூலம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஒகேனக்கல்லை அடுத்த ஊட்டமலையிலும் இன்று வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்தது. அங்கிருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்படும் நிலையில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் பென்னாகரத்தை அடுத்த நாகமரை, நெருப்பூர், சித்திரம்பட்டி பகுதிகளில் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் தண்ணீர் அதிகளவில் சாலைகளில் தேங்கி உள்ளது.

    காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் நாகமரை- பண்ணவாடி செல்லும் படகு போக்குவத்து நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நாகமரையில் இருந்து பண்ணவாடிக்கு பரிசல் இயக்குவது மிகவும் ஆபத்தான பயணம்.

    மேலும் பரிசல் மற்றும் படகில் செல்லும்போது லைப்ஜாக்கெட் எதுவும் கிடையாது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொள்ளும் சூழ்நிலை உள்ளதால் நாகமரை- பண்ணவாடி பரிசல் போக்குவத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை செய்து உள்ளது.

    நாகமரையில் இருந்து கொளத்தூருக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் மேச்சேரி வந்து பின்பு மேட்டூர் வழியாக கொளத்தூர் சுற்றி செல்கின்றனர். இவ்வாறு சுற்றி செல்வதால் நேரம் விரையம் ஆகிறது.

    எனவே நாகமரை- பண்ணவாடிக்கு செல்ல மாற்று வழிபாதை அல்லது மாற்று போக்குவரத்து வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 1 லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று அணையில் இருந்து 1 லட்சத்து 70 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 1 லட்சத்து 80 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் இன்று 120.05 அடியாக இருந்தது.

    நடப்பாண்டில் மேட்டூர் அணை 2-வது முறையாக கடந்த 11-ந் தேதி 120 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் 8-வது நாளாக இன்றும் 120 அடியை தாண்டியே மேட்டூர் அணை நீர்மட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் போக்கி வழியாக ஒன்றரை லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அதன் கரையோரம் உள்ள நாகராஜன் என்பவரது வீடு நேற்று இடிந்து விழுந்தது. இந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    மேலும் அங்குள்ள பெரியார் நகர், அண்ணா நகர் பகுதி வீடுகளில் வசிக்கும் மக்களை காலி செய்யுமாறு வருவாய் துறையினர் அறிவுறுத்தினர். அதில் பலர் காலி செய்ய மறுத்ததால் 11 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மேட்டூரிலிருந்து எடப்பாடிக்கு செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் 4-வது நாளாக அந்த சாலையில் போக்குவரத்து முடங்கி உள்ளது. தேவூர் அருகே உள்ள காவேரி கரையோர கிராமமான காவேரிப்பட்டி அக்ரஹாரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அந்த வீடுகளில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    அங்குள்ள அண்ணமார் கோவில் வளாகத்திலும் நீர் புகுந்தது. அந்த கோவிலையொட்டி உள்ள பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 3-வது நாளாக அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 400 ஏக்கர் வாழை உள்பட பல்வேறு பயிர்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

    இதனால் கல்வடங்கம், வற்றாம்பாளையம், கொடாரபாளையம், வெள்ளாளபாளையம் உள்பட பல பகுதிகளுக்கு தேவூர் வழியாக 8 கி.மீ. சுற்றி செல்கின்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான குமாரபாளையம், பள்ளி பாளையம் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. காவிரி மற்றும் பவானி ஆறுகள் பவானி கூடுதுறையில் கலக்கிறது.

    இதன் காரணமாக தண்ணீர் அழுத்தம் ஏற்பட்டு கோம்பு பள்ளத்தின் வழியாக தண்ணீர் குமாரபாளையம் நகருக்குள் புகுந்தது. இதனால் பள்ளி பாளையம் ரோடு, அப்பன் பங்களா, பெருமாபாளையம் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிபாளையம் புதன் சந்தை பகுதியில் உள்ள குமாரவேல், மாதேஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கி இருந்தனர். இதற்கிடையே வீட்டின் கூரையை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது. #Hogenakkal #Cauvery
    ×